60 வயதில் அசாத்திய சாதனை: 48 மாடி கட்டிடத்தில் ஏறிய ‘பிரெஞ்சு ஸ்பைடர் மேன்’
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆலியன் ராபர்ட் என்பவர் உயரமான கட்டிடங்களில் எந்தவித பாதுகாப்பு கருவிகளும் இன்றி ஏறுவதில் புகழ் பெற்றவர். இதன் காரணமாக இவர் ‘பிரெஞ்சு ஸ்பைடர் மேன்’ என்கிற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில் ஆலியன் ராபர்ட் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 48 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டிடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறி ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆலியன் ராபர்ட் பல முறை இந்த கட்டிடத்தில் ஏறியிருந்தாலும் இந்த முறை வெறும் 60 நிமிடத்தில் கட்டிடத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையை படைத்தார்.
“60 வயது என்பது ஒன்றும் இல்லை. நீங்கள் இன்னும் விளையாட்டில் ஈடுபடலாம், சுறுசுறுப்பாக இருக்கலாம், அற்புதமான விஷயங்களைச் செய்யலாம் என்கிற செய்தியை மக்களுக்கு சொல்லவே இந்த முறை 48 மாடி கட்டிடத்தில் ஏறினேன்” என ஆலியன் ராபர்ட் கூறினார். ஏற்கனவே ஆலியன் ராபர்ட் உலகம் முழுவதும் உள்ள பல உயரமான கட்டிடங்களில் ஏறியுள்ளார். உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீபாவின் உச்சியை அடைந்ததும் அவரது துணிச்சலான சாதனைகளில் ஒன்றாகும்.
அவர் வழக்கமாக தனது ஸ்டண்ட்களை முன் அறிவிப்பு இன்றியும் அனுமதி இல்லாமலும் செய்வது வழக்கம். இதனால் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். அதே போல் இந்த முறையும் அவர் கட்டிடத்தின் உச்சியை அடைந்ததும் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply