மியான்மரில் பள்ளிக்கூடம் மீது வான்வழி தாக்குதல் : 11 சிறுவர்கள் பலி
மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியது. அதை தொடர்ந்து மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் 1,500க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இப்போதும் அங்கு ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களை குறிவைத்து ராணுவம் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மியான்மரில் பள்ளிக்கூடத்தின் மீது ராணுவம் வான்தாக்குதல் நடத்தியதாக சிறுவர்களுக்கான ஐ.நா.வின் அமைப்பு யுனிசெப் தெரிவித்துள்ளது. இதுப்பற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மியான்மரின் வடமேற்கு பகுதியில் சகாயிங் பிராந்தியத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது.
ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர்களில் பறந்தபடி பள்ளிக்கூடத்தை சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னர் பள்ளிக்கூடத்தில் இருந்து 15 சிறுவர்கள் மாயமாகி உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மறுத்துள்ள மியான்மர் அந்த பள்ளிக்கூடத்தில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருந்தாகவும், அவர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply