யாழ் குடாநாட்டு மீனவர்களை தொழில்செய்ய அனுமதிக்குமாறு ஈ.பி.டி.பி. கோரிக்கை
பூநகரி இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் யாழ் குடாநாட்டின் தீவப் பகுதி மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி., யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் சந்திரசிறியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இராணுவத்தினரால் பூநகரி விடுவிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியைக் கேட்டு யாழ் குடாநாட்டு மக்களே முதலில் சந்தோஷப்பட்டதாகவும், பூநகரி விடுவிக்கப்பட்டதன் மூலம் யாழ் குடாநாட்டிலுள்ள மீனவர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் பலனடைந்திருப்பதாகவும் ஈ.பி.டி.பி.யின். யாழ் மாவட்ட அமைப்பாளர் உதயன், யாழ் இராணுவக் கட்டளைத் தளபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏ௩2 பாதை திறக்கப்பட்டால் யாழ் குடாநாட்டின் விவசாய உற்பத்திப் பொருள்கள், குடாநாட்டில் பிடிக்கப்படும் மீன்கள், பழவகைகள் போன்றவற்றை வெளிமாவட்டங்களிலுள்ள சந்தைகளுக்கு அனுப்ப முடியும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், யாழ் குடாநாட்டுக்கான உணவுப் பொருள்களைத் தடையின்றி எடுத்துவரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
பூநகரியில் விடுதலைப் புலிகள் இருந்தமையால் அந்தப் பகுதியில் யாழ் குடாநாட்டின் பாசையூர், நாவாந்துறை, குருநகர், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க முடியாதநிலை காணப்பட்டதாகவும், தற்பொழுது விடுதலைப் புலிகள் அங்கிருந்து அகற்றப்பட்டிலுப்பதால் அங்கு மீன்பிடிக்க அனுமதிக்குமாறும் ஈ.பி.டி.பி.யின். யாழ் மாவட்ட அமைப்பாளர் உதயன், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூநகரி விடுதலைப் புலிகள் வசம் இருந்ததாலேயே குக்நாட்டின் தீவகப் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல கடற்படையினர் அனுமதி மறுத்திருந்தனர். தற்பொழுது பூநகரி விடுவிக்கப்பட்டிருப்பதால் தீவகப் பகுதி மீனவர்களை கடற்படையினர் அனுமதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.
குடாக்கடலுக்கு மறு முனையிலுள்ள பூநகரிப்பகுதியில் விடுதலைப் புலிகளை சந்திப்பதாக கூறியே தீவகப்பகுதி மீனவர்கள் குடாநாட்டுக் கடலில் மீன்பிடிப்பதற்கு கடற்படைத் தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டது.
கடற்படையினரின் இந்தத் தடையுத்தரவால் பெரும்பாலும் குடநாட்டிலுள்ள மீனவ சமூகங்கள் பாதிக்கப்பட்டதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடித் தொழிலைக் கைவிட்டு நாளாந்தக் கூலித் தொழிலுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். சீரான வருமானமின்மையால் மீனவர்களின் பிள்ளைகள் போசாக்குக் குறைப்பாட்டுக்கும் உள்ளாகியுள்ளனர். தற்பொழுது பூநகரி மீட்கப்பட்ட நிலையில் தொழில் செய்வதற்குத் தமக்கு அனுமதி வழங்கப்படும் என குடாநாட்டின் தீவகப் பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply