ஆந்திர முதல்வருடன் காணாமல்போன ஹெலிகொப்டர் கண்டுபிடிக்கப்பட்டது

ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். மத்திய அரசு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், ஆந்திரா முழுவதும் பெரும் சோகத்தில் முழ்கியுள்ளது. ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலை பயணம் மேற்கொண்டார்.

அவர் புறப்பட்டுச் சென்ற ஒருமணி நேரத்தில், அந்த ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அதில், பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உள்பட 5 பேரின் நிலைமை குறித்து தகவல் ஏதும் தெரியாமல் இருந்தன. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள், காணாமல் போன ஹெலிகாப்டரை தீவிரமாக தேடிவந்தன. இதனிடையே, கர்னூலில் இருந்து 40 நாட்டிகல் மைல் தொலைவில், ராஜசேகரரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் உருக்குலைந்த மற்றும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

அப்போது, ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி உட்பட 5 பேரின் சடலங்கள் சிதைந்த நிலையில், நல்லமல்லா வனப்பகுதியில் இன்று காலை 9.50 மணியளவில் மீட்கப்பட்டது. ராஜசேகர ரெட்டி விபத்தில் மரணமடைந்ததை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம், ஆந்திரா உட்பட நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஐதராபாத்திற்கு விரைந்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply