இலங்கையின் நன்மைக்காகவே வருமான வரி உயர்த்தப்பட்டு உள்ளது: ரணில்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தனிநபர் மற்றும் கார்பரேட்டுக்கான வருமான வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.12 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தாலே வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால் இந்த வரி உயர்வு நடவடிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியாயப்படுத்தி உள்ளார்.

நாட்டின் உயர்ந்த நன்மைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- இலங்கையின் முதன்மை பட்ஜெட்டில் உபரி வருவாய் தேவை என சர்வதேச நிதியம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இலங்கையின் வருவாயையும் 8.5 சதவீதத்தில் இருந்து 14.5 சதவீத ஜி.டி.பி.யாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பான்மையான வரி வருவாய் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கிறது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் உள்பட பெரும்பாலான குடிமக்கள் மறைமுக வரி செலுத்துவதை தவிர வேறு வழியில்லை. இலங்கையின் நேரடி வரி வருவாயை 20 சதவீதம் அதிகரிக்குமாறு சர்வதேச நிதியம் கூறியுள்ளது. இல்லையென்றால் சாதாரண மக்களும் வரி செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்து உள்ளது. எனவே ரூ.1,00,000-க்கு மேல் சம்பாதிக்கும் நபர்களுக்கு வருமான வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது குடிமக்கள் மத்தியில் ஒரு முக்கிய கவலையாக மாறியுள்ளது.

ஆனால் இந்த வரி அமைப்பு இல்லாமல், 2026-ம் ஆண்டுக்குள் 14.5 முதல் 15 சதவீதம் ஜி.டி.பி. என்ற விரும்பிய இலக்கை அடைய முடியாது. இந்த வரி முறையை அரசு திரும்ப பெற்றால், சர்வதேச நிதியத்தின் உதவி கிடைக்காது. சர்வதேச நிதியத்தின் ஒப்புதல் இல்லாமல், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் நிதி ரீதியாக உதவி வரும் நாடுகளிடம் இருந்தும் உதவி கிடைக்காது. எனவே இந்த வரி உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்ந்தாலோ அல்லது மேலும் மோசமடைந்தாலோ நாட்டின் வணிகத்துறை பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதிகரிக்கும் பணவீக்கம், உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றவற்றால் நாட்டின் வர்த்தகத்துறையினரின் வருவாய், இலாபம் மற்றும் பணப்புழக்கத்தை வெகுவாக பாதித்து இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருப்பதாக பிரபல புத்தமத துறவி வரககோடா குணவர்தனே தேரா குற்றம் சாட்டியுள்ளார். நாட்டுக்கான தங்கள் கடமையையும் அவர்கள் புறக்கணித்து இருப்பதாகவும் தெரிவித்தார். தேசிய சொத்துகளை பாதுகாப்போம் என்ற வாக்குறுதியின் பேரில் வரும் அனைத்து அரசுகளும் அதற்கு மாறாக சொந்த நலன்களில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறை கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply