அடையாளம் காணப்பட்ட 35 கிராமங்களில் அடுத்த மாதம் முதல் மீள் குடியேற்றங்கள்: ரிசாட் பதியுதீன்

வவுனியா மாவட்டத்தில் 35 கிராமங்கள் மீள்குடியேற்றத்துக்காக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். இம்மீள் குடியேற்றங்கள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. ‘வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 35 கிராமங்களிலும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் கூறினார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமமான சாலம்பைக்குளத்திலும் 400 முஸ்லிம் குடும்பங்கள் இத் திட்டத்தின் கீழ் மீள்குடியமர்த்தப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார். புலிப் பயங்கரவாதிகளால் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இக் கிராமங்களிலுள்ளவர்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன் இவர்கள் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெயர்ந்தவர்களாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.

சாலம்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 முஸ்லிம் குடும்பங்கள் இடம் பெயர்ந்து அனுராதபுர மாவட்டம் ரம்பாவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இடம்பெயர்ந்தோரின் விருப்பின் பேரில் அடுத்த மாதமளவில் இவர்கள் மீண்டும் சாலம்பைக்குளத்தில் மீளக்குடியமர்த்தப்படுவர்.

மீளக்குடியமர்த்தலை துரிதப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இணைந்து வவுனியா மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 35 கிராமங்களிலும் கிராமிய கட்டமைப்புக்கான அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றன. தற்போது இக் கிராமங்களில் கூட்டுறவுச் சங்கங்கள், பாடசாலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கிராமங்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார். மீளக் குடியமர்த்தப்படவுள்ள கிராம வாசிகளின் பிரதான ஜிவனோபாய தொழில் விவசாயமாக இருப்பதனால் “பெரும்போக” செய்கை ஆரம்பிப்பதற்கு முன்னமாகவே இவர்களை தமது இடங்களில் குடியமர்த்தி தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply