கிளிநொச்சி நகருக்கருகில் கடும் மோதல்கள் நடைபெற்றுவருவதாக அறிவிக்கப்படுகின்றன

கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காக மூன்று முனைகளில் முன்னேற முற்படும் இலங்கைப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கிளிநொச்சி நகருக்கு அருகில் கடும் மோதல் நடைபெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இராணுவத்தினரின் 57வது படைப்பிரிவும், விசேட அதிரடிப்படைப் பிரிவு 1உம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல், அடம்பன் வடக்கு, புதுமுறிப்பு, திருமுருகண்டி ஆகிய பிரதேசங்களினூடாக மூன்று முனைகளில் விடுதலைப் புலிகளின் மண் அரண்களை ஊடறுத்து முன்னேற முயற்சித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை மாலை அடம்பன் வடக்கு மற்றும் புதுமுறிப்பு பகுதிகளில் படையினரை எதிர்த்து புலிகள் கடும் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், எனினும், இராணுவத்தினர் இந்த எதிர்த்தாக்குதல்களை சமாளித்துவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் குறிப்பிடுகிறது.

இந்த மோதல்களில் 27 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 70 பேர் காயங்களுக்குள்ளானதாகவும், இவர்களில் சிலர் மீண்டும் படையணிக்குத் திரும்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தரப்பில் 120 பேர் வரையில் கொல்லப்பட்டமை அவர்களது தொடர்பாடல்களை இடைமறித்துக் கேட்டதன் மூலம் தெரியவந்ததாகவும் அந்த இணையத்தளச் செய்தி குறிப்பிடுகிறது.

இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply