புலிகளிடம் ஆயுதங்களையும், அரசாங்கத்திடம் இராணுவ நடவடிக்கைகளையும் கைவிடக்கோரும் ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்லவேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கமும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிடவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது. 

விடுதலைப் புலிகள் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் சிறுவர்களைப் படையில் இணைப்பதை நிறுத்தவேண்டுமெனவும், ஆயுதங்களைக் கைவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தயாரித்திருக்கும் இறுதியறிக்கை இவ்வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த அறிக்கையில் மேற்கண்ட விடயங்கள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கம் மோதல்களைத் தேர்ந்தெடுத்திருப்பதுடன், இராணுவ வெற்றியைப் பெறமுன்னர் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில்லையெனத் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகளாலேயே இலங்கை அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானமொன்றை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது என்பதை எமது பிரதிநிதிகள் அறிந்துகொண்டனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் வன்னி மற்றும் ஏனைய பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள் என்பதை இராணுவத் தரப்பினர் மனதில்கொள்ளவேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் போது சூடான், ஈராக் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைவிட இலங்கையிலேயே கூடுதலானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும், சர்வதேச உதவி அவசியமெனவும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் மோதல்கள் ஆரம்பமான நாளிலிருந்து நாளாந்தம் ஐந்து பேர் கொல்லப்படுகின்றனர் அல்லது காணாமல் போகின்றனர் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பரா இராணுவக் குழுக்களாலேயே பெரும்பாலான கடத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், அவற்றில் எல்லாம் அரசியல் நோக்கத்துடனான கடத்தல்கள் இல்லையெனவும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply