ஜனாதிபதியின் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவை வழங்க வேண்டும்:வேலுகுமார்
“உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நிறுவப்படவுள்ள தேசிய கொள்கைத் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
பட்டினியால் வாடும் மக்களை அதிலிருந்து மீட்பதும், உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வது மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாகும். எனவே, இது தொடர்பில் முன்வைக்கப்படும் சட்டமூலங்களுக்கு கட்சி, பேதமின்றி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதவு வழங்க வேண்டும் எனவும் வேலுகுமார் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் பாரிய சமூக நெருக்கடியும் ஏற்பட்டது. இதில் உணவு பற்றாக்குறை அல்லது உணவு பஞ்சமென்பது பிரதான விடயமாகும். மறுபுறத்தில் உரப்பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் உணவு பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற விடயப்பரப்புக்குள் பொருளாதார பாதுகாப்பும் வருகின்றது. அதில் ஓர் அங்கமாக உணவு பாதுகாப்பு என்ற விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இதனை உணர்ந்து தேவையான சட்டங்கள் இயற்றப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளது வரவேற்ககூடிய விடயமாகும்.
அதேபோல உணவு பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள தேசிய வேலைத்திட்டத்துக்கு எமது தரப்பு யோசனைகளும் முன்வைக்கப்படும். உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் போஷாக்கு நிலையை உறுதிப்படுத்துவதில் துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கு இவ்வேலைத்திட்டம் உதவியாக இருக்குமென நம்புகின்றோம்.
ஏனெனில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுள் 50 வீதமானோர் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். வறுமையும் பிரதான காரணம். மறுபுறத்தில் சிறார்கள் மத்தியில் மந்தபோசனை விகிதமும் அதிகரித்துள்ளது. அதன் அபாயத்தை – ஆபத்தை உலக உணவு திட்டம் உரிய தரவுகளுடன் பட்டியலிட்டுள்ளது.
எனவே, மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அவசரமாக – அத்தியாவசியமாக உதவிகள் தேவைப்படுகின்றன. அதற்கு இந்த தேசிய வேலைத் திட்டம் வழிவகுக்கும். இதன் காரணமாகவே அதனை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றேன். இது மக்களின் உயிருடன் – வாழ்வுடன் – வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஆதரவு வழங்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.
நாட்டில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களினால் நாட்டின் விவசாயம் பாதிக்கப்பட்டது. அவ்வறான தவறுகளையும் திருத்திக்கொண்டு, உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். அப்போதுதான் உலக நெருக்கடியையும் சமாளிக்க முடியும். குறிப்பாக உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின்போது மலையகத்துக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply