சீனாவில் கடும் பனிமூட்டம் காரணமாக 200 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சோவ் நகரில் ஜெங்சின் ஹுவாங்கே என்கிற மிகப்பெரிய மேம்பாலம் உள்ளது. மஞ்சள் ஆற்றின் குறுக்கே செல்லும் இந்த மேம்பாலம் ஜெங்சோவ் மற்றும் அண்டை நகரான சின்சியாங்கை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை ஜெங்சோவ் நகரில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலம் முழுவதையும் பனி மூடியிருந்தது.
இதனால் அந்த மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடைவிதித்து உள்ளூர் போக்குவரத்து போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேம்பாலத்தின் இருதிசையில் இருந்தும் வாகனங்கள் தொடர்ந்து பயணித்தன. ஒருகட்டத்தில் முன்னால் செல்லக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அதிகமானது. இதனால் மேம்பாலத்தில் வேகமாக சென்ற சில கார்கள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதின.
அதனை தொடர்ந்து பின்னால் வந்த கார்கள், லாரிகள் உள்ளிட்ட டஜன் கணக்கான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின. பாலத்தின் இருதிசையில் இருந்தும் வந்த வாகனங்கள் பல பாலத்தின் நடுப்பகுதியில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக்கொண்டே இருந்தன. இதில் பல கார்கள் மற்றும் லாரிகள் நொறுங்கி, ஒன்றன் மேல் ஒன்றாக குவிந்தன. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. கிட்டத்தட்ட 200 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படும் நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலத்தில் சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டதை காட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply