72 மணிநேரம் கடந்துவிட்ட நிலையில் தொடர்ந்தும் இடம்பெயர் மக்கள் முகாம்களில் : இரா.துரைரத்தினம்
“வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 123 குடும்பங்கள், இன்றுடன் 72 மணித்தியாளங்கள் கடந்து விட்ட நிலையிலும் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் முகாம்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.” கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்த இக்குடும்பங்களில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 238 பேர் சிங்கள மகா வித்தியாலயத்திலும் 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இரா.துரைத்தினம் தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்குக் கூட பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். முதலாவது தொகுதியில் அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் அன்றைய தினமே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்ட போது பாதுகாப்பு தரப்பினர் சில விபரங்களைப் பெற வேண்டியிருப்பதால் 2 – 3 நாட்களுக்குப் பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று பதிலளித்ததாகவும் –
இராணுவக் கட்டளை அதிகாரி மற்றும் சிவில் இணைப்பதிகாரி ஆகியோருடன் தொடர்பு கொண்ட போது சில விபரங்களைப் பெற வேண்டியிருப்பதாலும், சில படிவங்களை நிரப்ப வேண்டியிருப்பதாலுமே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகப் பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார். “இவர்கள் இப்படி பதிலளித்தாலும், அங்குள்ள நிலைமையை அவதானிக்கும் போது, அவர்கள் கூறிய 2 – 3 நாட்களும் கூட கடந்து விட்ட சூழலே காணப்படுகின்றது” என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply