உகாண்டாவில் தேவாலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : குண்டு வெடிப்பில் 10 பேர் பலி
உகாண்டா நாட்டின் எல்லையில் உள்ள கிழக்கு காங்கோ பகுதியில் காசின்டி நகரில் ஸ்பாக் தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடித்த சத்தம் கேட்டு அருகில் குடியிருப்பில் இருந்தவர்கள் வந்து பார்த்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் மீட்பு படையினருடன் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கிழக்கு காங்கோவின் பாதுகாப்பு அதிகாரியான அப்பல்லோ முவானம்போகா கூறும் போது, தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உகாண்டாவின் பயங்கரவாத குழுவான நேச ஜனநாயக படைகளால் (ஏ.டி.எப்.) இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் ஏ.டி.எப். குழு தான் ஈடுபட்டு இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.
ஆனாலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து உகாண்டா ராணுவம் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply