எந்தவொரு நாட்டுக்கும் தலைவணங்காத நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும்: மைத்திரிபால சிறிசேன

உலகில் வேறு எந்த நாட்டுக்கும் தலைவணங்காத கெளரவமிக்க நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஓரிரு வருடங்களில் இது சாத்தியமாகுமென தெரிவித்த அமைச்சர், புதிய அரசியல் பரிமாண மொன்றைக் கட்டியெழுப்பி வருவதாகவும் தெரிவித்தார். தென்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.பி.பி.யினர் வெற்றியை எதிர்பார்க்க மாட்டார்கள். தாம் வெற்றிபெறப் போவதில்லை என்பதை அவர்களே புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தென் மாகாண சபையில் போட்டியிடும் அபேட்சகர்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

தென்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை 80 வீத மேலதிக வாக்குகளால் வெற்றிபெறச் செய்வது அம்பாந்தோட்டை மாவட்ட மக்களின் பொறுப்பாகும். அம்பாந்தோட்டை மாவட்டம் பல வரலாற்று வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ள மாவட்டமாகும். இம்மாவட்டம் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த யுகமொன்றும் வரலாற்றில் இருந்துள்ளது. சர்வதேச ரீதியிலும் பல நாடுகள் சிதைந்துபோன வரலாறுகள் உள்ளன. இதற்குக் காரணம் சிறந்த தலைமைத்துவம் இல்லாமையே ஆகும்.

பயங்கரவாதத்தினால் எமது நாடு ஒரு துன்ப வரலாற்றை சந்திக்க நேர்ந்தது. அது நாடு துண்டாடப்பட்டதொரு யுகம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அத்தகையதொரு யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு தெற்கு மக்களின் பூரண பங்களிப்பும் முக்கிய காரணமாகும். புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு தெற்கு மக்களின் பூரண பங்களிப்பு அவசியம்.

இதன் மூலமே சர்வதேச எதிரிகளுக்கும் எம்மால் பதில்கொடுக்க முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்நிகழ்வில் உரையாற்றுகையில், அமெரிக்க ஜனாதிபதிகளினால் செய்ய முடியாத பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி கொண்டதால் உலக நாடுகள் அனைத்தும் அவரைப் புகழ்கின்றன.

தென் மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி.யினரின் விமர்சனங்கள் வெறும் புஸ்வானமே. அவர்களால் எதையும் சாதிக்க முடியாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply