நாடு முழுவதிலும் நேற்று மகிழ்ச்சியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் முஸ்லிம் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இம்முறை நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர். மூன்று தசாப்த யுத்தச் சூழல் நீங்கியதால் வடக்கிலும், கிழக்கிலும் மிகவும் அமைதியாகவும், கலகலப்பாகவும் நோன்புப் பெருநாள் களைகட்டியிருந்தது. சகல பள்ளிவாசல்களிலும் பொது இடங்களிலும் பெருநாள் தொழுகைகளும், விசேட சமய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பெரும்பாலான இடங்களில் கூட்டுத் தொழுகைகள் நடத்தப்பட்டன. படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கில் கொண்டாடப்படும் முதலாவது நோன்புப் பெருநாள் இதுவாகும்.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகையில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் யூ. எல். முபீன் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். கல்முனையில் அதிகாலை நேரம் பள்ளிவாசலுக்குச் சென்று பெருநாள் தொழுகையையும் பின் குத்பா பிரசங்கத்திலும் கலந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பையும் (முஸாபஹா) பகிர்ந்து கொண்டனர். சமாதானத்திற்கான விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றதை காண முடிந்தது. பெருநாள் பலகாரங்களை ஏனைய மத சகோதரர்களுக்கும் வழங்கினர்.

அம்பாறை மாவட்டம் எங்கும் அமைதியானதும், நிம்மதியானதுமான நோன்புப் பெருநாளை மக்கள் கொண்டாடியுள்ளனர். கடந்த வருடங்களை விட இவ்வருடம் அனைத்துப் பிரதேசங்களிலும் முற்றவெளிகளில் பெரும்பாலான பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. பெருநாளை அடுத்து அம்பாறை மாவட்ட கிராமங்கள் பலவற்றில் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை, மருதமுனை போன்ற இடங்களில், மஸ்ஜிதுகளிலும், திறந்தவெளிகளிலும் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது. மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகளுக்கான பெருநாள் தொழுகையும் நடைபெற்றது. இங்கு தொழுகையினை மெளலவி சரூக் நடத்தி வைத்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகளுக்கான விசேட பரிசுகளை மட்டக்களப்பு நகர் முஸ்லிம் வரத்தகர் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் எம். எஸ். கலீலின் ஏற்பாட்டில் நல்லாட்சிகள் மக்கள் இயக்கத்தினால் வழங்கப்பட்டது.களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை சமய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேற்று மிக அமைதியாகக் கொண்டாடினர்.

கடும் காற்று, அடை மழைக்கு மத்தியிலும் கூட பள்ளிவாசல்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பெருநாளை முன்னிட்டு களுத்துறை மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் கலை, கலாசார, விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பதுளை நகரிலும் மற்றும் பிரதேசங்களிலும் நோன்பு பெருநாள் அமைதியாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. பதுளை மஸ்ஜிதுல் அன்வர் ஜும்ஆப் பெரியவள்ளிவாசலில் பெண்களுக்கான தொழுகைகள் காலை 7.30 மணிக்கும், ஆண்களுக்கான தொழுகை 5.00 மணிக்கும் நடைபெற்றன. வழமை போல பதுளை சிறைச்சாலையிலும் தல்தென்ன சிறைச்சாலையிலும் முஸ்லிம் கைதிகளுக்கான விசேட தொழுகை, பிரசங்கங்கள், துஆப் பிரார்த்தனைகள் என்பன உலமாக்களால் நடத்தப்பட்டடன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply