நிவாரண கிராமங்களை வைத்து அரசியல் நடத்த ஐ.தே.க முயற்சி: அநுர பிரியதர்சன யாப்பா

30 வருட மோதல் காரணமாக தமிழ் மக்களுக்கு கிடைத்தவற்றை விட அவர்கள் இழந்தவையே அதிகம். அவர்கள் இழந்த அனைத்தையும் மீளப்பெற்றுக் கொடுக்கவும் சிறந்த சூழலில் அவர்களை துரிதமாக மீள்குடியேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட கடந்த 4 மாத காலத்தில் 40 ஆயிரம் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் மிதிவெடிகள் அகற்றப்பட்டதும் ஏனையோரும் துரிதமாக மீள்குடியேற்றப்படுவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று  தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. மீள்குடியேற்றம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :- நிவாரணக் கிராமங்களுக்கு ஒருபோதும் சென்றிராத ஐ. தே. க. வினர் அங்குள்ள மக்களின் குறைபாடுகள் குறித்து பேசுவது நகைப்புக்குரியதாகும். இடம்பெயர்ந்த மக்களை எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் நாம் தடுத்து வைக்கவில்லை. மிதிவெடிகள் அகற்றப்பட்டவுடன் அவர்கள் சிறந்த சூழலில் மீள்குடியேற்றப்படுவர்.

மிதிவெடிகளை அகற்றுவது இலகுவான காரியமல்ல. குரேஷியாவில் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் கூட இன்னும் அங்கு மிதிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இடம்பெயர்ந்த மக்களில் இதுவரை மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் முதியவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்காக இரு ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக மருத்துவர்களும் தாதிமார்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொற்று நோய்களை தடுக்க தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

சகல நிவாரணக் கிராமங்களிலும் லக் சதொச கூட்டுறவுக் கடைகள், தபால் நிலையங்கள் தொலைபேசி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கிகளும் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மழைக்கு முகம் கொடுக்கும் வகையில் வீதிகளை அபிவிருத்தி செய்யவும் மலசல கூடங்கள், கழிவு நீர் அகற்றும் குழாய்கள் என்பவற்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து ஐ.நா. அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால், நிவாரணக் கிராமங்களுக்குச் சென்றிராத ஐ.தே.க. தலைவர்கள் மக்களுக்கு வசதிகள் அளிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட அனுமதிக்குமாறு ஐ.தே.க. கோருகிறது. சென்று பார்வையிட அது மிருகக் காட்சிசாலையல்ல. ஐ.தே.கவுக்கு பொழுதுபோக்காக பர்வை யிட நிறைய இடங்கள் உள்ளன. புலிகளின் பிடியில் இருந்த போது எது வித உரிமைகளும் இன்றியே வடக்கு மக்கள் வாழ்ந்து வந்தனர். அது குறித்து எதுவும் பேசாத ஐ.தே.க. ஆட்சிக்கு வரும் கனவுக்காக இடம்பெயர்ந்த மக்கள் குறித்து பொய்யான கருத்துக்களை கூறி வருகிறது. இதன் மூலம் அரசியல் இலாபம் பெற ஐ.தே.க. முயல்கிறது.

ஆனால் இடம்பெயர்ந்த மக்கள் சகல வசதிகளுடன் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்றார். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதிருக்க அரசாங்கம் சகல நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. புலிகள் ஒழிக்கப்பட்ட போதும் புலிகளுடன் தொடர்புடையவர் இன்னும் உள்ளனர். நேற்று முன்தினம் கூட 3 தற் கொலை குண்டுதாரிகள் கைதுசெய்யப்பட் டனர். இடம்பெயர்ந்த மக்களையும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத் துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply