சர்வதேச தரத்திற்கு ஏற்ப இடம்பெயர்ந்த மக்களுக்கு வசதிகள் அளிக்கப்படும்: பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இடம்பெயர்ந்த மக்களுக்கு வசதிகள் அளிக்கப்படுவதோடு, இந்தப் பணிகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சமூக அமைப்புகள் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. சர்வதேச தரப்பின் ஒத்துழைப்புடன் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதே எமது நோக்கமாகும் என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் 64வது அமர்வில் கலந்து கொண்ட பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, மூன்று தசாப்தகாலமாக நீடித்த பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த செயற்பாடுகளை தடுக்க சில தரப்பினர் மறைமுகமாக சதி செய்து வருவது கவலைக்குரிய விடயம் உலக பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட நிலையிலே இலங்கை அரசாங்கம் புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்தது. இதன் பலனை இலங்கை மட்டுமன்றி சமாதானத்தை விரும்பும் சகல சர்வதேச சமூகத்தினரும் அனுபவிக்கின்றனர்.

மோதல்கள் முடிவுற்ற நிலையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எம்முன் உள்ள முக்கிய சவால்களாகும். மோதல் முடிவடைந்த பின்னர் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் நாம் ஐ.நா.வுடன் பேச்சு நடத்தினோம். இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

மீள்குடியேற்றல், அபிவிருத்தி, அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்குதல், மறுசீரமைப்பு, நிரந்தர சமாதானம், பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதம் முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ள சகல பிரதேசங்களிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் தேர்தல்கள் நடத்தப்படும். இலங்கை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட்டு வருகிறது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இலங்கைக்கு பொருத்தமான முறையில் சமூக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.

மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தவும் நாட்டின் ஏனைய மக்கள் போல தடையின்றி தமது பணிகளை மேற்கொள்ளவும் உரிய சூழல் ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும். படையில் சேர்க்கப்பட்ட புலிகளுக்கு புதிய வாழ்க்கை நிலையை உருவாக்குவதற்காக புனர்வாழ்வுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ. நா.வினதும் தொண்டு நிறுவனங்களினதும் ஒத்துழைப்புடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தேசிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நாட்டிலுள்ள சகல மக்களினதும் அரசியல், பொருளாதார தகைமைகள் மற்றும் ஆளணியை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த இலங்கை தயாராகி வருகிறது.

மீள்குடியேற்றல் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக உதவி வழங்கும் நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றன. கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் தேசிய பொருளாதாரத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் பலம் வாய்ந்த புதிய பொருளாதாரமொன்றை இந்த வருடத்தினுள் ஏற்படுத்துவதற்காக வடக்கின் வசந்தம் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.

மோதல்கள் முடிவுற்றுள்ள நிலையில் சகல மக்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குமென நீண்டகால அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சர்வ கட்சிக் குழுவினூடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன் யோசனைக்கு சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டை பெறமுடியுமென அரசாங்கம் நம்புகிறது. இதனூடாக ஏற்படுத்தப்படும் தீர்வு எமது நாட்டுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த தீர்வாக இருக்க வேண்டும்.

உலக மயமாக்கல் உட்பட சர்வதேச மட்டத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ள பிரச்சினைகளை ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். பயங்கரவாதம், உலக பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற சர்வதேச மட்ட நெருக்கடிகளுக்கு சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

புலிகள் இயக்கம் இலங்கையில் மேற்கொண்ட நாசகார வேலைகளுக்கு சர்வதேச மார்க்கங்களினூடாகவே நிதி உதவி கிடைத்துள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளினூடாக புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் குழுக்கள் புலிகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி வந்துள்ளன. புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் தொடர்ந்தும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சில புலி உறுப்பினர்கள் தாமிருக்கும் நாடுகளில் இருந்து கொண்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை முறியடிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நட்பு நாடுகளிடமும் ஏனைய தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் முறையற்ற ரீதியில் பணம் திரட்டி வருகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க எமது நட்பு நாடுகள் முன்வர வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச மட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியது அவசியமாகும். உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஐ. நா.வின் பிரதான குறிக்கோள் என இலங்கை கருதுகிறது. உலகம் முழுவதும் காணப்படும் தீர்க்கப்படாத பெருமளவான பிரச்சினைகள் குறித்து ஐ. நா. கவனம் செலுத்த வேண்டும்.

பலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் இஸ்ரேல் – பலஸ்தீன சமாதானம் என்பன தொடர்பில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் குறைந்த கவனமே செலுத்தப்பட்டன. இதனால் எமது எதிர்பார்ப்புகள் சிதைந்துவிட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply