களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய 8 வைத்தியர்களில் நான்கு சிங்கள வைத்தியர்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதால் வைத்தியசாலையின் செயற்பாடுகள் பெருமளவு ஸ்தம்பித்திருப்பதாகத் தெரியவருகிறது.
 
நாளாந்தம் வெளிநோயளர் பிரிவுக்கு 400௬00 நோயாளிகள் செல்கின்றபோதும், அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு நான்கு வைத்தியர்களே இருப்பதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் வசிகரன் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் பாதுகாப்புக்கு 3 பொலிஸார் பணிக்கமர்த்தப்பட்டுள்ள போதும், வைத்தியர்களுக்குக் காணப்படும் பற்றாக்குறையால் வைத்திய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மட்டக்களப்பு நாவற்காடு வைத்தியசாலையைச் சேர்ந்த சிங்கள வைத்தியரான பாலித பத்மகுமார சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலிருந்து 16 சிங்கள வைத்தியர்களும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 30 தமிழ், முஸ்லிம் வைத்தியர்களும் வெளியேறியிருந்தனர்.

இதேவேளை, வைத்தியர் பாலித்த பத்மகுமாரவின் கொலையுடன் தொடர்புடைய மூவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கும், அந்தக் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலேயே மூவரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply