கிளிநொச்சி, திருமலையில் சுதந்திர வர்த்தக வலயங்கள் வடக்கு, கிழக்கில் முதலிடுவோருக்கு 15 வருட வரிச்சலுகை

கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படுமென தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முதலீடு செய்வோருக்குப் பதினைந்து வருட காலத்துக்கு வரிச்சலுகை அளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்  அமைச்சர் யாப்பா தெரிவித்தார். சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படும்போது வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த வர்களுக்கே தொழில் முன் னுரிமை வழங்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்குப் பெருமளவானோர் முன்வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் கூடுதலான முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறினார். முதலீடுகளைச் செய்வதற்கு ஆசியாவில் மிகச் சிறந்த நாடாக இலங்கை கருதப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“வெளிநாடு வாழ் இலங்கையர்களும் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ளனர். சீமெந்து, உருக்கு, உரம் ஆகிய தொழிற் சாலைகளை திறப்பதற்கு சிலர் தற்போது முன்வந்துள்ளனர். மேல் மாகாணத்திற்கு வெளியில் முதலீடு செய்வோருக்கு வரிச்சலுகை வழங்கப்படுவதுடன் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முதலீடு செய்வோருக்குக் கூடுதல் வரிச்சலுகை அளிக்கப்படும்” என்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை முதலீட்டுச் சபை 1978 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னரே கூடுதலான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தம்மிக பெரேரா தெரி வித்தார்.
இலங்கை முதலீட்டுச் சபை தெற்காசியாவிலேயே சிறந்த முதலீட்டு நிறுவனம் என அவர் கூறினார்.

181 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இலங்கை முதலீட்டுச் சபை 64 புள்ளிகளைப் பெற்று ஒரு ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றது.

978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முதலீட்டுச் சபை 2005 ஆம் ஆண்டு வரையிலான 27 வருட காலத்தில் 2700 மில்லியன் டொலரையே முதலீடாகப் பெற்றுள்ளது. எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்தது முதல் நான்கு வருட காலத்தில் 2800 மில்லியன் டொலரை முதலீடாகப் பெற்றுள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இலங்கை வழங்கிய சலுகைகளே இதற்கான முக்கிய காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply