புலிகளே தமிழ் மக்களை தூர விலக்க முயற்சிக்கின்றனர் உள்நாட்டு வெளிநாட்டு சர்வ மதத் தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
தமிழ் மக்கள் நாட்டின் பல பிரதேசங்களிலும் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் வடக்கிலுள்ள தமிழ் மக்களை புலிகளே ஏனைய சமூகங்களிலிருந்து தூர விலக்குவதற்கு முயற்சிக்கிறார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சர்வ மதத் தலைவர்களுடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல.
புலிகளிடமிருந்து அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்கான மனிதநேய நடவடிக்கையே அங்கு மேற்கொள்ளப்படுகிறது. புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை.
புலிகள் சமாதான நீரோட்டத்தில் இணைந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே நாம் பதவியேற்று 7 மாதங்கள் வரை அவர்களுக்கெதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும் நிராயுதபானிகளாக இருந்த இராணுவ வீரர்களையும் அப்பாவி மக்களையும் அவர்கள் படுகொலை செய்தார்கள். நாட்டின் தலைவர் என்ற வகையில் புலிகளின் இந்தக் கொடூரத்தைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதனால்தான் புலிகளுக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தோம்.
அரசாங்கம், கிழக்கில் இராணுவ ரீதியாக அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டபோதும் தமிழ் மக்களுக்கு ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகமொன்று அங்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply