கிளிநொச்சி எந்தநேரமும் கைப்பற்றப்படலாமெனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு
கிளிநொச்சி எந்தநேரமும் கைப்பற்றப்படலாமெனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றிவிட்டனர் என்ற செய்தியை ஜனாதிபதியே அறிவிப்பார் எனக் கூறியுள்ளார்.
எமது படையினர் கிளிநொச்சி நகரின் எல்லையில் உள்ளனர். விடுதலைப் புலிகள் தமது தளங்களிலிருந்து பின்வாங்கிச் செல்கின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.
மிகவிரைவில் கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றிவிடுவார்கள் என அமைச்சர் கூறினார்.
கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாக எந்தவிதமான கருத்துக்களும் வெளியாகவில்லை.
இதேவேளை, ‘கிளிநொச்சி இதோ நாம் வருகிறோம்’ என்ற கோசத்துடன், கடும் மழைக்கு மத்தியிலும் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமரில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல், அடம்பன் வடக்கு, திருமுருகண்டி, புதுமுறிப்பு ஆகிய பிரதேசங்களினூடாக இராணுவத்தினர் கிளிநொச்சியை நோக்கி மூன்று முனைகளில் முன்னேறி வருவதாகவும், ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் இரண்டு தரப்பிலும் அதிகளவு இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் இராணுவத் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதுடன், 70 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது, இராணுவத்தினர் 43 பேரைக் கொன்று 80 பேரைக் காயப்படுத்தியதாக புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இராணுவத்தினர் தாம் கைப்பற்றிய பகுதிகளை தற்போது பலப்படுத்தி வருவதாகவும், படையினருக்கான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப்பொருள் விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் புலிகள் மேலும் பல குறுக்குப் பதுங்குகுழிகளை அமைத்து வருவதாகவும் தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply