விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்து பின்னர் கொல்லவில்லை: இலங்கை அரசு

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் அவரை படுகொலை செய்ததாக வெளியாகியுள்ள செய்தியை இலங்கை அரசு மறுத்துள்ளது. கடந்த மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது. இந்த செய்தியிலேயே பெரும் சர்ச்சை நிலவுகிறது.  இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீலங்கா கார்டியன் என்ற இணையதளம் புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரபாகரன் இராணுவத்திடம் சரணடைந்தார். அதன் பின்னர் அவரை இராணுவம் சித்திரவதை செய்து பின்னர் படுகொலை செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரின் கடைசி கட்டத்தின்போது தப்பி நாட்டை விட்டே வெளியேறிய பிரபாகரனின் மெய்க்காவலர் ஒருவர் கூறிய தகவல், இலங்கை உளவுப் பிரிவிலிருந்து சேகரித்த தகவல், பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல் ஆகிய மூன்று தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிடுவதாக கார்டியன் கூறியுள்ளது.

ஆனால் இதை இலங்கை பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இராணுவத்தை போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த நடத்தப்படும் சதி வேலைகள் இவை. இது வெறும் கட்டுக்கதையே.

இராணுவத்தின் மூத்த அதிகாரிகளின் கெளரவத்தைக் குலைக்கும் செயல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில், அந்த நாட்டு வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், போரின் கடைசிக் கட்டத்தின்போது, புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சரணடைய முன்வந்து பாதுகாப்புப் படையினரை அணுகினர்.

ஆனால் அவர்களை இராணுவம் கொலை செய்து விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரபாகரன் சரணடைந்தார் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க புலிகளின் தலைவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் வதந்திகள் பரவுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply