பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதெனஓய்வெடுத்துக் கொள்ள முடியாது: ஜனாதிபதி
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதென நாம் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது. தேசிய பாதுகாப் பையும் அரசியல் நிலைப்பா ட்டையும் பலப்படுத்துவது மிக முக்கியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஒற்றுமை மூலமே தேசிய பாதுகாப்பையும் அரசியல் நிலைப்பாட்டையும் பலப்படுத்த முடியுமென தெரிவித்த ஜனாதிபதி, தேசிய ஒற்றுமை பற்றி சிந்திக்காத கடந்த கால பாடங்கள் எமக்கு சிறந்த முன்னுதாரணமாகுமெனவும் தெரிவித்தார்.
ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :- தேசிய பாதுகாப்பு என்றும் மறக்க முடியாதது.
கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவமளிக்காமையே பல்லாயிரக்கணக்கான உயிர்களின் அழிவுக்கும் வளங்களின் அழிவுக்கும் காரணமாயின. இதனால் நாட்டைக் கட்டியெழுப்பும் பல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போயின. உலகப் படத்தில் கீழ் நிலைக்கு நாடு வர நேர்ந்தது. எம்மை முந்திக் கொண்டு உலகில் பல நாடுகள் வெகுவாக முன்னேறிய போதும் எமது பின்னடைவுக்கும் அதுவே காரணமாகியது. மீண்டும் அந்நிலை உருவாவதற்கு நாம் இடமளிக்க முடியாது. பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டதென நாம் ஓய்வடைய முடியாது.
உலகப் படத்தின் முன்னணிக்கு தாய்நாட்டை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கான பெரும் பங்கு படைத்தரப்பினருக்கு உள்ளது. நாட்டின் இறைமை ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பரிசளிப்பு விழாவுக்கு நான்காவது தடவையாக இம்முறை நான் வருகை தந்துள்ளேன். எனினும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும் சூழலில் இம்முறை இவ்விழாவில் கலந்துகொள்கிறேன்.
நாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் உலகில் மிகக் கொடூரமான பயங்கரவாதத்திடமிருந்து தாய் நாட்டை மீட்ட பாதுகாப்புப் படையினர் மீதான கெளரவம் அவர்கள் மீதான நம்பிக்கை மற்றும் அன்பில் எதுவித மாற்றமுமில்லை. உலகின் புகழைப் பெற்ற திறமையான வீரர்களே எமது நாட்டுப் படையினர். அவர்களின் திறமையும், முதிர்ந்த அறிவும் ஆக்கபூர்வமான செயற்பாடுமே கொடிய பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள உறுதுணையாக அமைந்தது.
உலகில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத யுத்தத்தை நோக்கும்போது மிகக் குறைந்த பாதிப்பினூடாகவே பயங்கரவாதத்தை எமது இராணுவத்தினர் வெற்றிகொண்டுள்ளனர். சிவில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் யுத்தம் செய்வதில் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். பாதுகாப்புப் படையினரின் தொழில் என்றுமே முடிவுறுவதல்ல. அப்பணி என்றும் தொடரக்கூடியது. படையில் இணைந்து கொண்ட எமது இளைஞர்களில் பெரும்பாலானோர் தூரத்துக் கிராமத்தவர்களே. இவர்கள் கற்றுத் தேர்ந்தவர்களல்ல. எனினும், இவர்களுக்கான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்கள் இன்று உலகின் சிறந்த படை வீரர்களாகத் திகழ்கின்றனர்.
அரசாங்கம் படை வீரர்களை கெளரவப்படுத்துவதிலும் அவர்களது நலன்புரி விடயங்களுக்குமென பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகிறது. பாதுகாப்பமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் சகல மாவட்டங்களிலும் விசேட செயற்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டுமன்றி நாட்டைப் பாதுகாப்பதிலும் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதிலும் படையினருக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. அதை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவது அவசியம்.
பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியான நாட்டை உருவாக்க அர்ப்பணிப்புடன் பாடுபட்ட படைவீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் நாட்டின் தலைவர் என்ற வகையிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply