யாழிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இம்மாத முடிவுக்குள் மீள் குடியேற்றம்: அமைச்சர் ரிசாத் பதியுதீன்

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியே ற்றும் நடவடிக்கைகள் இந்த மாத முடிவுக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இது தவிர எதிர்வரும் சில தினங்களில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் மேலும் 8 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த மாத முடிவுக்குள் 58 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதாக இந்திய எம்.பிக்களிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதும் அதனைவிட கூடுதலான மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பாக நேற்று (27) அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு அந்த மக்கள் தினமும் கட்டம் கட்டமாக சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த 25ஆம் திகதி 2955 பேரும் 26ஆம் திகதி 2874 பேரும் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். வவுனியா நகரில் இருந்து இடம்பெயர்ந்த 2144 பேர் நேற்று மீள்குடியேற்றப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சகல மக்களும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசம், வவுனியா தெற்கு சிங்களப் பகுதி, செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் இந்த மாத இறுதிக்குள் மீள்குடியேற்றப் பணிகள் பூர்த்தி செய்யப்படும். வவுனியா வடக்கு பகுதியில் மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடையவில்லை. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 15 ஆயிரம் பேர் இதற்காக விண் ணப்பித்துள்ளதோடு அவர்களை மீள் குடியேற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சில நாடுகள் மீள்குடியேற்றம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிற போதும் இந்திய அரசாங்கம் ஒருபோதும் எம்மீது அழுத்தங்கள் பிரயோகித்தது கிடையாது. ஆரம்ப முதலே மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்தியா உதவி வருகிறது. மேலும் 500 கோடி உதவி வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளது. இந்திய எம்.பிக்களின் இலங்கை விஜயம் மூலம் அவர்களின் முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply