சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து தீவிர கவனம்
சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மை கட்சிகள் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதகாக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் தேர்தல்களின் போது பொதுவான ஓர் சிறுபான்மைக் கட்சி கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ரேணுகா ஹோட்டலில் தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் டி. சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான சிறுபான்மை கட்சிகளை ஒன்றிணைத்து விரிவான ஓர் கூட்டணியை அமைப்பது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவது, கிழக்குமாகாணத்தில் காணி பகிர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் பேசும் கட்சிகள் ஆதரவளிப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட 8 விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த கட்சிகள் இறுதி இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் செவ்வாய் கிழமை மீண்டும் கூடிய பேச்சுவார்த்தை நடத்த உள்ள இந்த கட்சிகள், இதன் பின்னர் இணைந்து ஊடக மாநாடு ஒன்றை நடத்தி, தமது முன்னணி குறித்து அறிவிக்க உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இந்த முன்னணியை ஏற்படுத்துவதில் முன்நின்று செயற்பட்டு வருகிறது.
இந்த கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply