ஹமாஸ் பிணையிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த தாயும் மகளும் விடுவிப்பு
அமெரிக்காவின் சிகாகோ வட்டாரத்தைச் சேர்ந்த தாயையும் அவரின் பதின்ம வயது மகளையும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.ஹமாஸ் துப்பாக்கிக்காரர்களால் காஸாவில் பிணை பிடிக்கப்பட்டிருந்த அவ்விருவரும் வெள்ளிக்கிழமை (அக். 20) இஸ்ரேலில் காத்திருந்த தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைந்தனர்.
திருவாட்டி ஜுடித் டாய் ரானன், 59, அவரின் மகள் நெட்டலி ஷோஷனா ரானன், 17, இருவரும் காஸா எல்லையில் இஸ்ரேலியப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
முன்னதாக, ஹமாசின் பேச்சாளர் அபு உபைடா இத்தகவலை வெளியிட்டார். பின்னர் இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹு அதை உறுதிப்படுத்தினார்.
விடுவிக்கப்பட்ட பதின்ம வயதுப் பெண்ணின் தந்தையான திரு உரி ரானன், அமெரிக்காவிலிருந்து தன் மகளிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் நன்றாக இருப்பதை அறிந்துகொள்ள முடிவதாகவும் கூறினார்.
தாயும் மகளும் விடுவிக்கப்பட்டதை அமெரிக்காவில் உள்ள குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாகவும் பிணை பிடிக்கப்பட்ட அனைவருக்காகவும் தாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்யவிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply