காசாவுக்கு 20 லாரிகளில் நிவாரண பொருட்கள்

எகிப்தின் ரஃபா எல்லை திறக்கப்பட்டு பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு நேற்று 20 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 15-வது நாளாக நீடித்தது. காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக லெபனானின் எல்லையை ஒட்டி வசிக்கும் சுமார் 20 லட்சம் இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.பாலஸ்தீனத்தின் காசா பகுதி, இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்துள்ளது. கடந்த 9-ம் தேதி முதல் காசா பகுதிக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது. மேலும் காசா பகுதிக்கு நிவாரண பொருட்களை அனுப்ப இஸ்ரேல் அரசு மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து சவுதி, கத்தார், சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறுநாடுகள் மற்றும் தொண்டு அமைப்புகள் சார்பில் சரக்கு விமானங்கள் மூலம் எகிப்தின் அல் ஆரிஷ் விமான நிலையத்துக்கு சுமார் 3,000 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு எகிப்து- காசாவின் ரஃபா எல்லை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.ஆனால்இஸ்ரேல் போர் விமானங்கள் ரஃபாஎல்லைப் பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தியதால் ரஃபா எல்லையை திறந்து நிவாரணப் பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முயற்சியால் நிவாரணப் பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அரசு அனுமதி அளித்தது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் நேற்று முன்தினம் எகிப்தின் ரஃபா எல்லைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து எகிப்தின் ரஃபா எல்லைநேற்று திறக்கப்பட்டு முதல்கட்டமாக 20 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பின் தகவல் பிரிவு இயக்குநர் ஜூலியட் கூறியதாவது:

எகிப்தில் இருந்து முதல்கட்டமாக 20 லாரிகளில் காசாவுக்கு நிவாரணப் பொருட்கள் வந்துள்ளன. இதில் 4 லாரிகளில் மருந்துப் பொருட்களும், இதர லாரிகளில் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவையும் கொண்டு வரப்பட்டு உள்ளன.

மொத்தம் உள்ள 23 லட்சம் காசா மக்களுக்கு இந்த நிவாரண உதவிகள் போதாது. தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் கிடைத்தால் மட்டுமே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியும். இவ்வாறு ஜூலியட் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply