மும்பையில் தாக்குல்கள்: 80 பேர் பலி, 250 பேருக்கு மேல் படுகாயம்

மும்பை மாநகரில் இதுவரை இருந்திராத வகையில் புதன்கிழமை நள்ளிரவு 11 இடங்களில் பயங்கரவாதிகள் பொதுமக்களை துப்பாக்கிகளால் நேரடியாகவே சுட்டுள்ளனர். கைக்குண்டுகளை வீசியும் தாக்கிக் கொன்றுள்ளனர். போலீஸார் நடத்திய எதிர் தாக்குதலில் செளபாட்டி கடற்கரையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் விஜய் சலாஸ்கர், ஹேமந்த் கர்கர் என்ற அதிகாரிகள் உள்பட ஏராளமான போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.

தாஜ், ஒபராய் என்ற 2 நட்சத்திர ஹோட்டல்களில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகப்பிடித்து வைத்துள்ளனர். பிணையாள்களையும் ஹோட்டல் ஊழியர்களையும் போலீஸ்காரர்களையும் அவர்கள் தயவு தாட்சண்யம் பாராமல் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். தாஜ் ஹோட்டல் மேல் தளத்தில் தீ பிடித்து எரித்துள்ளது.

பயங்கரவாதிகள் தங்களுக்குள் நன்கு திட்டமிட்டு தாங்கள் தாக்க வேண்டிய இடங்களையும் நேரத்தையும் தீர்மானித்து செயல்பட்டுள்ளனர். அப்பாவிகளான பொதுமக்களை திட்டமிட்டு சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர். சம்பவம் நடக்கும் இடங்களில் மட்டும் அல்லாது பிற இடங்களிலும் உயிர்ச் சேதம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே வெடிகுண்டுகளையும் வெடிக்கச் செய்திருக்கின்றனர்.

ரயில் நிலையங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பொதுமக்கள் வந்து செல்லும் வர்த்தக வளாகங்கள், மேம்பாலங்கள், பெரிய சாலைச் சந்திப்புகள் ஆகியவற்றைத் தேர்வு செய்துள்ளனர்.

விக்டோரியா டெர்மினஸ் என்று அழைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் இரவு 10.33 மணிக்குத் தொடங்கிய பயங்கரவாதிகளின் கோரத் தாக்குதலுக்கு 80-க்கும் மேற்பட்டோர் இரையானார்கள், 250-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இறந்தவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

நகரில் ஆங்காங்கே தாக்குதல்கள் நடந்துகொண்டிருப்பதால் காவல்துறையினரால்கூட தெளிவாகத் தகவல்களைத் தர முடியவில்லை.

“சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்’ (சி.எஸ்.டி.) என்ற முக்கியமான ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் இரு குழுக்களாக நுழைந்து, பயணிகள் முன்பதிவு அறைக்கு அருகில் இருந்தபடி கண்மூடித்தனமாகச் சுட்டனர். அதில் 10-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இத்தகவலை ரயில்வே போலீஸ் கமிஷனர் ஏ.கே.சர்மா தெரிவிக்கிறார்.

இந்த டெர்மினலுக்கு அருகில் உள்ள நரிமன் இல்லத்தில் 4 பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் புகுந்திருப்பதாகவும் போலீஸôர் அவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடத்துவதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

மசகான் கப்பல்கட்டும் தளத்துக்கு அருகில் ஒரு டாக்ஸியில் குண்டு வெடித்து 3 பேர் இறந்தனர்.

மும்பை மாநகரில் 11 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக மாநில காவல்துறைத் தலைவர் ஏ.என். ராய் தெரிவிக்கிறார்.

ஒபராய் ஹோட்டலில் 2 பயங்கரவாதிகள் நுழைந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகளால் சுட்டனர். கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களைப் பிடிக்க போலீஸôர் அந்த ஹோட்டலைச்சுற்றி வளைத்துள்ளனர். ஹோட்டலிலிருந்து ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ஹோட்டல் இப்போது டிரைடண்ட் ஹோட்டல் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

காமா மருத்துவமனையிலும் தெற்கு மும்பையின் காமா மருத்துவமனையிலும் ஒரு குண்டு வெடித்தது. விலே பார்லே என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஒரு டாக்ஸியில் குண்டு வெடித்தது.

மும்பையில் நடந்துள்ள அட்டூழியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசி மூலம் பேசினார். பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதல் குறித்து அதிர்ச்சியும் கவலையையும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply