அமெரிக்க அறிக்கை குறித்து ஆராய ஐவர்கொண்ட நிபுணர்கள் குழு ஜனாதிபதியினால் நியமனம்: மஹிந்த சமரசிங்க
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐவர் கொண்ட நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்த குழு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தனது ஆய்வு அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் அதில் மேலும் கூறியதாவது.
இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதுபோன்றதொரு தொனியில் அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்கத்திளத்தினால் முக்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை அமெரிக்க காங்கிரஸுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இது இலங்கையை பொறுத்தவரை பாரிய சவாலாக அமைந்தது. எனவே அதனை நாங்கள் நிராகரிப்பதுடன் நின்றுவிடாமல் இது தொடர்பில் ஆராய நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்தார். அந்த வகையில் ஐவர் கொண்ட நிபுணர்கள் குழு இன்று முதல் (நேற்று) நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி டி.எஸ். விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக சட்டத்தரணி நிஹால் ஜயமான்ன முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.சி. சில்வா சட்டத்தரணி திருமதி மனோ ராமநாதன் மற்றும் ஜெசீமா இஸ்மாயில் ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தனது ஆய்வு அறிக்கையை ஜனாதிபதிக்கு ஒப்படைக்கவேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுக்கள் திணைக்களங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் பொலிஸார் முப்படையினர் இந்த நிபுணர்கள் குழுவுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கவேண்டும்.
அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஆராய்வதுடன் குற்றச்சாட்டுக்களின் தன்மை குறித்து ஆய்வு செய்வதுமே இவர்களின் பணியாகும். நாங்கள் நிபுணர்கள் குழு தொடர்பான அறிவிப்பை செய்ததும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் அதனை வரவேற்றார். மேலும் பல சர்வதேச அமைப்புக்கள் இதனை வரவேற்றுள்ளன. நாங்கள் எமது அர்ப்பணிப்பை செயற்பாட்டு ரீதியாக வெளியிட்டுள்ளோம். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான கே.என். சொக்சி அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பாராட்டி பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். உண்மையில் முதலில் நான் இதனை கண்டு ஆச்சரியமடைந்தேன். அவரின் கூற்றை அரசாங்கம் வரவேற்கின்றது. அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட திறமையுள்ள கதாபாத்திரமாக திகழ்கின்றார். நான் அரசியலுக்கு வந்த புதிதில் எனக்கு அதிகமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply