மும்பாய் தாஜ் விடுதியில் இராணுவம்; கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 100ஐத் தாண்டியது
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பாயில் இன்று அதிகாலை முதல் ஆயுத தாரிகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளது. 200 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அதிகாலை வேளையில் ஆரம்பித்த தாக்குதல் முற்பகல் 11 மணிக்குப் பின்னரும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. எப்போது தமது எதிர் நடவடிக்கை நிறைவடையும் என்று உறுதியாகக் கூறமுடியாது என்று பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.
மும்பாயிலுள்ள பிரபல விடுதிகளான தாஜ் கொலாபா, ரைடன் (பழைய ஒபரோய்) மற்றும் வைத்தியசாலைகள், புகையிரத நிலையங்கள் ஆகியவற்றுக்குள் நேற்றிரவு நுழைந்த ஆயுததாரிகள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், கைக்குண்டுத் தாக்குதல்களையும் நடத்தினர்.
தாஜ் உல்லாச விடுதியில் தங்கியிருந்த 100ற்கும் அதிகமானவர்கள் ஆயுததாரிகளால் பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டனர். தாஜ் விடுதியின் சமயலறைப் பகுதியால் நுழைந்த ஆயுத தாரிகள் விடுதியில் பணியாற்றிய பலரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.
தாஜ் விடுதிக்குள் தற்போது இந்திய இராணுவத்தின் விசேட கொமாண்டோ பிரிவினரும், கடற்படைப் பிரிவினரும் நுழைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதிக்குள் சிக்கியிருந்த பலர் தற்போது மீட்கப்பட்டிருப்பதாகவும், எனினும், இன்னமும் 4௫ ஆயுததாரிகள் உள்ளே மறைந்திருப்பதாகவும் இராணுவம் கூறியுள்ளது.
விடுதிக்குள் ஒவ்வொரு அறையாக இராணுவம் சென்று ஆயுததாரிகளைத் தேடியழித்து, ஆயுதங்கள், வெடிபொருள்களை அப்புறப்படுத்தித் துப்பரவுப் பணியில் ஈடுபட்டு வருவதாக இராணுத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. விடுதிக்குள்ளும், அறைகளுக்குள்ளும் ஆங்காங்கே கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
முழுமையாக தீவிரவாதிகளைத் தேடியழிக்க நீண்ட நேரம் பிடிக்கும் என்பதால், எப்போது இந்த நடவடி;ககை நிறைவடையும் என்று கூறமுடியாது என்றும் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினருக்கும், ஆயுததாரிகளுக்கும் இடையிலான நேரடி மோதல்களில் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் உட்பட 14 பாதுகாப்புத் தரப்பினர் இதுவரையில் கொல்லப்பட்டிருப்பதாகவும், 5 ஆயுததாரிகள் கொல்லப்பட்டும், 9 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் மும்பாய் பொலிஸ் கூறியுள்ளது. கொல்லப்பட்ட 100க்கும் அதிகமான பொதுமக்களில் 9 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த மும்பாய் தாக்குதல்களுக்கு டெக்கான் முஜாஹிடீன் எனும் அமைப்பு உரிமைகோரியுள்ளது.
இதேவேளை, மும்மையில் தோன்றியிருக்கும் சூழ்நிலை குறித்து ஆராய்வதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவசர உயர் பாதுகாப்புக் கூட்டமொன்றை உடனடியாகக் கூட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply