ஜனநாயக முறைப்படி தமிழரசுக் கட்சியின் தலைமை தெரிவு இடம்பெறும் : சுமந்திரன் நம்பிக்கை

தமிழரசு கட்சி தலைமைக்கு இருவர் போட்டியிடுகிறார்கள் என்று சொல்வது தவறு. பலர் போட்டியிடும் ஒரு ஜனநாயக கட்சியே எமது கட்சி என ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சியின் யாப்பின் அடிப்படையிலே தலைமை பதவிக்கு சிலருடைய பெயரை ஒரு குறித்த முறையிலே கட்சி உறுப்பினர்கள் பிரேரிக்கலாம். அப்படியாகவே இருவருடைய பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சம்மதத்துடனே இந்த பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஒருசிலர் எங்களுடைய பெயரை பிரேரிக்கின்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் பிரேரிக்கப்படும் பட்சத்தில் கட்சி யாப்பிலே எப்படி தெரிவு நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக கட்சி என்ற அடிப்படையில் தலைமை பதவிக்கு பலர் தகுதி உடையவர்களாக இருப்பது அந்த கட்சியின் பலமான விடயமாகும்.

பல கட்சிகளில் வாழ்நாள் தலைவர்களே உள்ளனர். அந்கக் கட்சிகளைப் போல் அல்லாது எங்களுடைய கட்சியில் பலருக்கு அந்த தகுதி இருக்கிறது.

பலருடைய பெயர் முன்மொழியப்படுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் கூடி வாக்களித்து யார் தலைவர் என்பதை தீர்மானிப்பார்கள். மிகவும் ஆரோக்கியமான ஒரு விடயமாக நான் அதனை கருதுகிறேன்.

எவர் வெற்றி பெற்றாலும் மற்றவர்கள் தொடர்ந்து இணைந்து கட்சி அங்கத்தவர்களாக நாங்கள் செயல்படுவோம்.” என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply