ஆட்கடத்தல், இடம்பெயர்ந்தோர் குறித்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் நாளை பேச்சு
சட்டவிரோத குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல் விவகாரம் குறித்து அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கிடையிலான உயர் மட்டப் பேச்சுவார்த்தை நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு நாளை வரவுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையிலிருந்து மக்கள் எவ்வாறு படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் வருகிறார்கள் என்பது குறித்து ஆராய்வதற்காக அவுஸ்திரேலியா பிரதமர் கெவின் ரூட்டின் விசேட தூதுவர் ஜோன் மெக்கர்த்தி இலங்கைக்கு வரவுள்ளதாக தன்னை இனம் காட்டிக்கொள்ள விரும்பாத அப்பேச்சாளர் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி படகு மூலம் வரும் இலங்கையர்கள் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும் அப்பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத குடியேற்ற வாசிகள் அதிகமாக வரும் நாடென்பதில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை முந்திக்கொண்டு இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அண்மையில் 39 இலங்கையர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply