யோகபுரம் துணுக்காய் பகுதியில் அஞ்சல் சேவை ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவினுள் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக யோகபுரம், துணுக்காய் ஆகிய இரு இடங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டு அஞ்சல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வீ.குமரகுரு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, பாடசாலை, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், உப அஞ்சல் அலுவலகங்கள் என்பன துணுக்காய் பிரதேசத்தில் செயற்படத் தொடங்கியிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

துணுக்காய் பிரதேச அஞ்சல் சேவை குறித்து வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வீ.குமரகுரு மேலும் தெரிவிக்கையில்,

” யோகபுரம், துணுக்காய் ஆகிய பகுதிகளில் தனியார் வீடுகளில் முத்திரை விற்பனை, கடிதங்களைப் பெறுவது உள்ளிட்ட அஞ்சல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சேவையை மேற்பார்வை செய்வதற்காக அதிகாரிகள் வவுனியாவில் இருந்து அங்கு தினசரி சென்று வருகின்றார்கள்.

சேகரிக்கப்படும் கடிதங்கள் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு வவுனியாவில் இருந்து வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோன்று, வெளியிடங்களில் இருந்து அந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு வருகின்ற கடிதங்கள் வவுனியாவில் இருந்து அங்கு எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் போலவே கிளிநொச்சி மாவட்டத்திலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றார்கள். எனவே இந்தப் பகுதியிலும் அஞ்சல் அலுவலகங்களைத் திறந்து சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகின்றோம்” என்றார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply