மக்களுக்கு நன்மை பயக்காத கூட்டமைப்பு
தமிழ் பேசும் கட்சிகள் கூட்டமைப்பாகச் செயற்பட வேண்டும் என்ற கருத்து மீண்டும் முன்வைக்கப்படுகின்றது. சில வாரங்களுக்கு முன் இது தொடர்பான ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதன் பின் அது பற்றிய பேச்சு எழவில்லை.
இச் சந்திப்பில் பங்கு பற்றிய இரண்டு கட்சிகள் இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற புதிய கூட்டணியில் பங்காளிகளாகின. இவ்விரு கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால சகபாடிகள் என்பதால் இவை ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிகள் ஆகியதொன்றும் புதுமையானதல்ல.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்துவம் பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தமிழ் பேசும் கட்சிகளினது கூட்டமைப்பின் அவசியத்தை மீண்டும் வலி யுறுத்துகின்றார்.
தமிழர்கள், முஸ்லிம்கள், இந்திய வம்சா வளியினரின் கூட்டமைப்பு அமைய வேண்டியது அவசியம் என்று கடந்த திங்கட்கிழமை கட்சித் தலைமைய கத்தில் கூறியிருக்கின்றார்.
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பு அமைவதன் நோக்கம் இக் கட்சிகளை ஐக்கிய தேசிய முன்னணியின் பக் கம் இழுத்துச் செல்வதல்ல என்று ரவூப் ஹக்கீம் கூறியுள்ள போதிலும், மக்களிடம் அச் சந்தேகம் தோன்றுவதற்கான சாதக நிலைகள் உள்ளன.
தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான பிரச்சினைகளுக்குரிய தீர்வையும் உள்ளடக்கியதான வேலைத்திட்டமொன்றின் அடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையின் அடிப்படையிலேயே இம்முன்னணி அமைந்துள்ளது.
அதே நேரம், இம்முன்னணிக்குத் தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சி இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைத் தடம்புரட்டிய வரலாற்றைக் கொண்டது. இந்த முன்னணியுடனும் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்புடனும் ஒரே நேரத்தில் சம்பந்தப்படுவது தமிழ் பேசும் மக்களின் நலனை உறுதிப்படுத்தும் முயற்சியாகாது.
மக்களின் பொதுவான உடனடிப் பிரச்சினைகளைக் கையா ள்வதற்குக் கட்சிகள் கூட்டாகச் செயற்படும் நடைமுறை வழமையானது. இவ்வாறான கூட்டுச் செயற்பாடு எப்போதும் தற்காலிகமானதாகவே இருக்கும். உடனடிப் பிரச்சினை முடிந்ததும் கூட்டுச் செயற்பாடும் முடிவுக்கு வரும்.
ஆனால் வித்தியாசமான சூழ்நிலையிலேயே கூட்டமைப்புகள் அமைகின்றன. அடிப்படையானதும் பிரதானமானது மான தீர்வு கூட்டமைப்பின் முக்கிய கொள்கையாக அமைதல் வேண்டும்.
தமிழ் பேசும் மூவினங்களினதும் பிரதான பிரச்சினையாக ஒரே பிரச்சினையை இனங்காட்ட முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கு இனப் பிரச்சினை பிரதானமானது. இந்திய வம்சாவளியினரின் பிரதான பிரச்சினை வேறு.
தமிழ் பேசும் மூவினங்களினதும் அடிப்படையானதும் பிரதானமானதுமான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றின் தீர்வுகளை உள்ளடக்கியதான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பு அமை வதே சரியானது.
அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் தேர்தல் நெருங்கிவரும் காலத்தில் அவசரமாகக் கூட்டமைப்பை அமைக்க முயற்சிப்பதும், அம்முயற்சியில் ஈடுபடுபவர்கள் ஐக்கிய தேசிய முன்னணியிலும் பிரதான பங்காளிகளாக இருப்பதும் தேர்தலுக்காகவே இக் கூட்டமைப்பு என்ற எண்ணத்தை மக்களிடம் தோற்று விப்பது இயல்பானதே.
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பு என்ற கருத்துருவம் தவறானதல்ல. அது மக்களின் பிரதான பிரச்சினைகளுக் கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் தொடர்பாகவும் அவற்றை அடைவதற்கான அணுகுமுறை தொடர்பாகவும் எட்டப்படும் உடன்பாட்டின் அடிப்படையில் அமையும் பட்சத்திலேயே மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். அத்தகைய உடன்பாடு இல்லாது அவரப்பட்டு அமைக்கும் கூட்டமைப்பு தேர்தலை மையமாகக் கொண்டதே.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply