நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப உரிய நேரத்தில் தேர்தல் பற்றி அறிவிக்கப்படும்: தேசிய மாநாட்டில் ஜனாதிபதி
உலகின் எத்தகைய பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும் சரி அவர்களது அழுத்தங்களுக்கும் நாம் அடிபணியத் தயாரில்லை. நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப உரிய நேரத்தில் தேர்தல் பற்றி அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலா- பாராளுமன்றத் தேர்தலா? எதுவாயினும் மக்கள் எதிர்பார்ப்பவை நிறைவேற்றும் வகையில் அதற்கான தீர்மானத்தை கட்சி மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு நேற்று கெத்தாராம விளையாட்டரங்கில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் பழமையான கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கென பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். தேடித் திரிகின்றார்கள்.
இத்தகைய பலவீனமுற்றவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் உலகத்தை எதிர்கொள்வதற்கு அவர்களுக்குப் பலமேது? என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி; அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அது இலங்கை அரசியலில் புலிகள் தொடர்புபடாத தேர்தலாகவே அது இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இலட்சக் கணக்கானோர் கலந்துகொண்ட இத்தேசிய மாநாட்டில் வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
‘இனி நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இத்தேசிய மாநாட்டில் ஐந்து முக்கிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசியல், படையினருக்கான கெளரவம், நாட்டின் பொருளாதாரம், தேசிய ஒற்றுமை, சர்வதேச நட்புறவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரேரணைகளை முறையே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர் டி. எம். ஜயரட்ன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் முன்வைத்தனர்.
இம்மாநாட்டில் தலைமையுரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது வருடாந்த தேசிய மாநாட்டை நடத்தும் இக்காலகட்டமானது எமது நாட்டிற்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் முக்கிய மானதொரு காலகட்டமாகும். இன்று இலங்கையில் பிறந்த ஒருவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தாம் இலங்கையர் என பெருமையாகக் கூறமுடியும். அதற்கான சூழலை நாம் உருவாக்கியுள்§¡ளம்.
உலகில் மிகவும் மோசமான பயங்கர வாதத்தை ஒழிப்பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அரசாங்கத்தைப் பாதுகாக்கச் செயற்பட்டவர்கள் கட்சி ஆதரவாளர்களே. நாட்டை மீட்கும் பயணத்திலும் நாட்டு மக்களோடு இணைந்து நாட்டைப் பாதுகாக்கச் சென்ற வர்களும் அவர்களே.
அதுமட்டுமன்றி கிழக்கில் தொடங்கி தெற்கு வரை நாம் நடத்திய மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சியையும் விட 25 இலட்சம் அதிகப்படி வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, வெளிநாடுகள் எமது விடயத்தில் தலையிடாது, தடுத்து நிறுத்தியதும், நாம் எமது ஜனாதிபதியுடன் உள்ளோம் என உலகிற்கு வெளிப்படுத் தியதும் அவர்களே. இத்தகைய கட்சி ஆதரவாளர்களால் நாம் பெருமைப்படுகின் றோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாநாட்டில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற பெருமை எமக்குள்ளது.
இன்று இந்த நாட்டில் சிறுபான்மை என்று எவருமில்லை நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளே. நாம் மஹிந்த சிந் தனையில் தெரிவித்த வேலைத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். நாம் ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவ தில்லை. சொன்னதை செய்வோம். செய் வதை சொல்வோம். எமது கட்சி ஜனநாயகக் கட்சியாகும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என சகலரும் எமது கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். நாம் எவருக்கும் பயந்து செயற்படவில்லை. மக்கள் தீர்மானமே எமது தீர்மானமாகும். மக்களே இந்நாட்டின் மன்னர்கள். நாம் ஒருபோதும் அதை மறக்க மாட்டோம். மக்கள் சேவையையும் நாம் மறக்க மாட்டோம்.
நாம் அனைவரும் இணைந்து இந்த அழகான தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்றைய இந்நிகழ்வில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வடக்கிலிருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளும் கலை நிகழ்ச்சியொன்றை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply