வவுனியாவில் பெண் புலி உறுப்பினர் இருவர் கைது; பிரான்ஸிலுள்ள புலிகளின் உறுப்பினர் நிக்ஸனை கைது செய்ய நடவடிக்கை
வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களைக் கண்காணிக்கச் செல்லும் அரசியல் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தை செயற்படுத்த நியமிக்கப்பட்டிருந்த பெண் கரும்புலி உறுப்பினர் ஒருவரை காலி விசேட குற்ற விசாரணைப் பிரிவின் குழுவொன்று கைதுசெய்துள்ளது. வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று முன்தினம் சந்தேக நபரான இந்தப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அனுஷியா ஏப்ரஹாம் என்ற பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 23ம் திகதி வவுனியா, உக்குளாங்குளம் பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த போது கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள வினோதநாயகி என்ற பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்தப் பெண் கைதுசெய்யப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வினோதநாயகி மற்றும் அனுஷியா ஆகிய இந்தப் பெண் புலி உறுப்பினர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது பிரான்ஸிலுள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியான நிக்ஸன் என்பவரின் உத்தரவின் பேரிலேயே தாம் இந்தத் தற்கொலைத் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டுவந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
நிக்ஸன் என்பவரை சர்வதேச காவல்துறையினரின் உதவியோடு கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தச் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் மூன்று கரும்புலி பெண் உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை காலி விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கரும்புலி உறுப்பினர்கள் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வவுனியாவிற்கு வந்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply