நால்வரைக் கொல்ல 60 தோட்டாக்கள்: ஹிஸ்புல்லா
மட்டக்களப்பு களுதாவளைப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைக் கொலை செய்வதற்கு 60 துப்பாக்கித் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
களுதாவளைப் பகுதியில் முன்னாள் பொலிஸ் அதிகாரி, அவருடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடந்த புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்த நால்வரைக் கொல்வதற்கு 60 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களில் 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், கிழக்கில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் குலைத்து ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் எனக் கூறப்படுகிறது” என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
இந்தப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.
இதேவேளை, மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் கிழக்கு மாகாணத்தில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மறுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply