வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கு மேலதிக உதவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக உதவிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட பணிப்புரைக்கு அமைய, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கான நிவாரணப் பணிகள் மாவட்ட செயலகம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் அங்கு மேலதிகமாக தேவையாகவுள்ள அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது, வெள்ள நிலைமை காரணமாக யாழ். மக்கள் தற்போது எதிர்நோக்கும் அத்தியாவசிய தேவைகள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

இக்கலந்துரையாடலையடுத்து யாழ்ப்பாணத்தில் வெள்ளம் காரணமாக சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்புச் செய்வதற்கும், நீர் இறைக்கும் இயந்திரங்கள். தற்காலிக கூடாரங்கள், பிளாஸ்ரிக் நீர்த்தாங்கிகள், பால்மா உட்பட குழந்தைகளுக்குத் தேவையான உணவுகள் போன்றவற்றை உடனடியாக அங்கு அனுப்பி வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

இந்தப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு துரிதமாக அனுப்பி வைப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் கடற்படை உயரதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply