கொலைகளைக் கண்டித்து மட்டக்களப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் கொலைச் சம்பவங்களைக் கண்டித்து மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் மட்டு நகரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்படுகிறது.
 
இந்தப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழ் ஆரம்பமாகியது. இதில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எட்வின் கிருஷ்ணராஜா, ஆர்.துரைரட்ணம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருப்பதாக எமது மட்டக்களப்புச் செய்தியாளர் அறியத்தருகிறார்.

மாலை வரை நடைபெறவிருக்கும் இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிற்பகல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருக்கும் நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில் சில சக்திகள் இவ்வாறான கொலைகளைத் தொடர்ந்து வருவதாக மட்டக்களப்பு மாநகரசபைத் தலைவர் சிவகீதா பிரபாகரன் கூறினார்.

படையினரே பொறுப்பு

புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் விடிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி படுகொலைகளுக்குப் பொறுச்சொல்லவேண்டியவர்கள் பாதுகாப்புப் படையினரே என்பதை நாம் சுட்டிக்காட்டவிரும்புகிறோம்” என அடையாள உண்ணாவிரதம் தொடர்பாக உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் ஒன்றியம் விடுத்துள்ள துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலைகள் நிறுத்தப்படவேண்டும், கடத்தல்கள் நிறுத்தப்படவேண்டும், மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களின் சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி, கிழக்கு மாகாண முதலமைச்சர், சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply