தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு

வடபகுதியில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையிலும், மழை காலமாதலால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வவுனியாவிலுள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை வழங்கினார். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும், மீள்குடியேற்றம், அபிவிருத்தி உட்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், விவசாய நடவடிக்கைககளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது.

மாந்தை மேற்கு பகுதியில் உடனடியாக 7000 வீடுகளை கட்டுவதற்கான துரித வேலைத்திட்டமொன்றையும் ஆரம்பிக்குமாறும் அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார். அத்துடன் விவசாயம், சுகாதாரம், கல்வி, கூட்டுறவு, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், மின்சாரம், போன்ற சகல துறைகளிலும் கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வடமாகாணத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் தத்தமது பிரதேசத்திற்கு திரும்பும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளும், அனுமதிகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள், தமது பொருட்களை கொண்டு செல்வதற்காக கெண்டர் ரக 2 வாகனங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் தேவைகளுக்கென 700 துவிச்சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

அடம்பன் மற்றும் திருக்கேதிஸ்வரம் ஆஸ்பத்திரிக்கு தாதியர் மற்றும் ஊழியர்கள் வந்து செல்வதற்கென துவிச்சக்கர வண்டிகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. அத்துடன் இப்பகுதியில் டெங்கு, மலேரியா தடுப்புக்கென நடமாடும் நோய்த்தடுப்பு பிரிவொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது வடமாகாண பிரதம செயலாளர் வீ. சிவசாமி, கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் உட்பட வடமாகாண அமைச்சுக்களின் செயலர்கள் பலரும் கலந்து கொண்டனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply