இராணுவத்தினரால் வழிகாட்டப்படும் பயணங்கள் எங்களுக்குத் தேவையில்லை: சிவசக்தி ஆனந்தன்
இராணுவத்தினரின் வழிகாட்டுதலுடனான பயணம் என்பதால் இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களுக்குச் செல்வதற்கான அழைப்பைத் தான் நிராகரித்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். “நாங்கள் எங்களது வாகனத்தில் வருவோம் என இராணுவத்தினருக்குத் தெரிவித்தோம். எனினும், அரசு தனது ஹெலிக்கொப்டரிலேயே முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என வற்புறுத்தியது எனத் தெரிவித்துள்ள அவர், எமது மக்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஏன் ஹெலிக்கொப்டரில் செல்லவேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன, இராணுவத்தினரின் துணையுடன் மேற்கொள்ளப்படும் வழிகாட்டுதல் பயணங்களை நிராகரித்துள்ளார்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசு இடம் பெயர்ந்தவர்களின் முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதித்தமை தொடர்பாக ஐ.பி.எஸ். செய்திச்சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஏமாற்று நடவடிக்கை. முகாமில் இருந்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்வதற்கு அரசு அனுமதித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகாம்களுக்கு நாங்கள் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். இராணுவத்தினரால் வழிகாட்டப்படும் பயணங்கள் எங்களுக்குத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply