இலங்கையில் தமிழர் ஜனாதிபதியாக வரமுடியாது வெற்றிபெறும் தரப்பை ஆதரித்தால் தீர்வு கிட்டும்:ஐயாத்துரை

நாட்டின் ஜனாதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அவரிடம் தமிழ் மக்களுக்கான தேவைகளையோ அன்றி அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலோ கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்கும் வகையிலே சில தமிழ் அரசியல் தரப்பின் செயற்பாடுகள் அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த அடிப்படையிலே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பில் இருந்து பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போது ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்தவர்;

”நாட்டினது அரசியல் சூழலுக்கேற்ற வகையில் குறித்த ஒரு தரப்பினர் வெற்றிபெறுவர் என தெரிந்திருந்தும் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி வேட்பாளரை இன்றுவரை தமிழர் தரப்பினால் ஆதரிக்கப்பட்டுவரும் துர்ப்பாக்கியமான வரலாறு காணப்படுகின்றது.

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ஏதாவதொரு காரணத்தை கூறி தமது தெரிவு இவர்தான். இவரை ஆதரியுங்கள் என்று கூறி தமிழ் மக்களை ஆதரிக்குமாறு திசைதிருப்பி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற நிலை மாறி தமிழ் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவுசெய்து நிறுத்துவது தொடர்பில் சில தமிழ் கட்சிகள் முனைகின்றனர்.

நாட்டிலுள்ள அரசியல் முறைமையில் தமிழர் தரப்பால் ஜனாதிபதியாக தெரிவாகக் கூடிய அல்லது வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை என்றே கூறலாம்.

எனவே, இந்த தமிழ் தரப்பினரின் பொது வேட்பாளர் தெரிவு என்பது தேவையற்ற ஒன்றாக இருப்பதுடன், அதனை முன்வைப்பதும் பயனற்றதாகவே இருக்கும்.

மாறாக தமிழ் மக்கள் பேரம்பேசி தமது வாக்குகளை வெற்றிபெறக்கூடிய தரப்புக்கு வழங்கி, அவரை ஆதரித்தால் நிச்சயமாக எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கம் என்பதே எமது நிலைப்பாடு” என தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அவரிடம் தமிழ் மக்களுக்கான தேவைகளையோ அன்றி அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலோ கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்கும் வகையிலே சில தமிழ் அரசியல் தரப்பின் செயற்பாடுகள் அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply