இஸ்ரேல் – ஈரான் பதற்றம் விமான சேவையை இடைநிறுத்திய எயார் பிரான்ஸ்
சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலுக்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா, போலந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் தமது பிரஜைகளை இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளன.
சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலில் இரண்டு ஜெனரல்கள் உட்பட ஏழு இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலைமையானது மத்தியகிழக்கில் வன்முறையை அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு வழிவகுத்துள்ளது.
இந்நிலையில், ஈரான், லெபனான், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் முன்னதாக தமது குடிமக்களை அறிவுறுத்தியது.
இதன்படி, ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் சேவையில் இருந்து நிறுத்துவதாக பிரான்ஸ் விமான சேவை நிறுவனமான எயார் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஏனைய நாடுகளும் குறித்த பகுதிக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளன.
மேலும், ஈரான் மற்றும் இஸ்ரேலை உள்ளடக்கிய பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மறு அறிவித்தல் வரை தமது நாட்டு பிரஜைகள் இரு நாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இரு நாடுகளிலும் உள்ள இந்திய குடிமக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், நடமாட்டத்தை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜேர்மனி தனது குடிமக்களை குறிப்பாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அதிகரிக்கும் பதட்டம் வெளியேறும் பாதைகளை பாதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலிய அதிகாரிகள் தாம் எதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply