இத்தாலியில் தந்தை-மகன் கைது: மும்பை தாக்குதலில் தொடர்பு
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு பணப் பரிமாற்றம் செய்ததாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தந்தை-மகனை இத்தாலியில் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். வடக்கு இத்தாலி பகுதியான பிரேசியாவில் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனம் நடத்தி வந்த முகமது யாகூப் ஜன்ஜூவா (60), ஆமீர் யாகூப் ஜன்ஜூவா (31) ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் தந்தை-மகனாவர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் மும்பையில் 2008 நவம்பர் 26ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தங்களின் நிறுவனம் மூலம் பணப்பரிமாற்றம் செய்தது தெரியவந்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு பின்னர் இணையதள கணக்குகள் மூலம் தீவிரவாதிகளுக்கு இருவரும் பணம் வழங்கி உதவியதாக பிரேசியா நகர தீவிரவாதிகள் தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரி ஸ்டெபோனா போன்ஸி தெரிவித்தார்.
அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தகவலுக்கு பின்னர் கடந்த டிசம்பர் மாதம் முதல் இத்தாலியில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் சர்வதேச தீவிரவாதிகளுக்கு இத்தாலியிலிருந்து பணப்பரிமாற்றத்திற்கு உதவும் நபர்களையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்துதான் முறைகேடான பணப்பரிமாற்றம் செய்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே இந்திய அரசு போதுமான ஆதாரங்களை இத்தாலிக்கு வழங்கிய பின்புதான் தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் சிக்கியுள்ளதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட டேவிட் கோல்மேன், ரானா ஆகியோருடன் தொடர்புள்ள கூட்டாளிகள் பலர் தேடப்பட்டு வருகிறார்கள்.
இத்தாலியில் பிடிபட்டவர்களுக்கு கோல்மேனுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply