வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்க வேண்டுமாயின் வெட் வரியை மீண்டும் அதிகரிக்க நேரிடும் : மஹிந்த சிறிவர்தன
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், தற்போதைய 18% வெட் வரியை 20% – 21% ஆக அதிகரிக்க நேரிடும் எனவும், அரசாங்கத்தினால் அத்தகைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாது எனவும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.
அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் திறைசேரி செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச சேவையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்துள்ள தொழில்சார் நடவடிக்கை தொடர்பில் இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு வழங்கக்கூடிய சாதகமான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்கும் சாத்தியக்கூறுகள் இல்லாவிட்டாலும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின் தற்போது அரசுக்கு இருக்கும் செலவீனத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 140 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இருபதாயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் மேலும் 280 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் திறைசேரி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருமானத்தைப் பெறுவதற்காக தற்போதைய வருமானத்தை அதிகபட்சமாக நிர்வகித்தாலும், வரிகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்க, வெட் வரி 2 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தொழிற்சங்கங்கள் கோரும் சம்பளத்தை அதிகரிப்பதற்கு 3%இற்கு மேல் வெட் அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், தற்போது அதை செய்ய இயலாது எனவும் ஏற்கனவே வெட் வரி 18 வீத உச்ச அளவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளால் முன்பு போன்று மத்திய வங்கியினால் பணம் அச்சிட முடியாது என சுட்டிக்காட்டிய திறைசேரி செயலாளர், அவ்வாறு செய்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தை வெற்றிககரமாக முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்கவும் இங்கு கருத்துத் தெரிவித்ததோடு, அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிப்பது கடினமான பணியாக இருந்தாலும், அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான ஒதுக்கீட்டை வழங்குவதாக ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பள முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply