மீள்குடியேறியோருக்கு டிசம்பர் 15க்கு முன் மேலும் ரூபா25,000
நிவாரண கிராமங்களிலிருந்து வடக்கில் தமது சொந்தக் கிராமங்களில் மீளக் குடியேறியபோது இருபத்தைந்தாயிரம் ரூபா வழங்கப்பட்ட அனைவருக்கும் மேலும் இருபத்தைந்தாயிரம் ரூபா எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படுமென்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். மீள்குடியேறுவோர் தற்காலிக வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஏற்கனவே இருபத்தைந்தாயிரம் ரூபா வழங்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகை தற்போது ஐம்பதினாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிதாகக் குடியேறுவோருக்கு இந்தத் தொகை பெற்றுக்கொடுக்கப்படுவதுடன், ஏற்கனவே குடியமர்ந்தவர்களுக்கு நிலுவைத் தொகையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பதியுதீன் கூறினார். தமது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர்,
‘மக்கள் இடம்பெயர்ந்தபோது இருந்த நிலையைவிடவும் கூடுதலான வசதிகளுடன் வாழக்கூடிய சூழலைத் தோற்றுவித்தே அவர்கள் மீளக்குடியமர்த்தப்படுகின்றனர். இரண்டு ஏக்கர் காணியில் விவசாயம் செய்வதற்குத் தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.
தம்மிடமுள்ள கூடுதலான ஏக்கரில் விவசாயம் செய்ய விரும்பினால் சொந்தச் செலவில் செய்யலாம். ஆனால், அரசாங்கம் இரண்டு ஏக்கருக்கு மாத்திரமே உதவிசெய்யும். மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடி உபகரணங்களும் ஏனைய வசதிகளும் செய்துகொடுக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.’
வவுனியா வடக்கில் இன்னும் நான்கு நாட்களில் மீள்குடியேற்றம் மேற் கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply