உயர்நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி, பிரதமர் விமர்சிப்பது தவறானதொரு எடுத்துக்காட்டு : ஜீ.எல்.பீரிஸ்

பாராளுமன்ற சிறப்புரிமைக்குள் இருந்துக் கொண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவால் ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வாதுவ போதிராஜ விகாராதிபதி கோட்ட ஸ்ரீ கல்யாணி சமகி தம்ம மகா சங்க சபையின் மநாயக்கர் கொடபிடியே ராகுல தேரரை ஞாயிற்றுக்கிழமை (29) சந்தித்து அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதை ஆரம்பத்தில் இருந்து சுட்டிக்காட்டினோம்.அரசியலமைப்புக்கு முரணாக பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் காணப்படுவதால் தான் அவருக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற சிறப்புரிமைக்குள் இருந்துக் கொண்டு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விக்குள்ளாக்க முடியாது.கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகிய இருவரும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க போவதில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

ஜனாதிபதி தேர்தல் பணிகளை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபர் பதவி இன்றியமையாதது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.பொலிஸ்மா அதிபருக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கும் போது அரசியலமைப்புக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்குமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுவதை விடுத்து ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கும்,நீதித்துறைக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகிறார்.உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க போவதில்லை என்று நாட்டின் முதல் மற்றும் இரண்டாம் பிரஜைகளான ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர் குறிப்பிடுவது தவறானதொரு எடுத்துக்காட்டு என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply