நுவரெலியா நீதிமன்றம் ஜீவன் தொண்டமானுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான திரு.ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் நேற்று (29) நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி நுவரெலியா பித்ரு தோட்டத்திற்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சென்று அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் ஊழியர்களை தடுத்து வைத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நுவரெலியா பொலிஸார் நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இன்னிலையில் தோட்ட நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சந்தேக நபர்களின் பெயர்களை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்ததுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், இதன் பிரகாரம் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். சத்தியவேல், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லோகதாஸ் மற்றும் நுவரெலியா உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் யோகநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபர்கள் எவரையும் பொலிஸார் பெயரிடாத காரணத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்கந்தி நீதிமன்றில் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் .எஸ்.சத்தியவேலிடம் நாம் வினவியபோது, ​​தமது கட்சியின் பொதுச் செயலாளருக்கோ அல்லது தம்முடைய பெயர்களோ அல்லது தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் பெயர்களை பொலிஸார் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்தார். எனவே, நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தமது கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட மூவரும் நீதிமன்றில் சந்தேகநபர்களாக தம்மை முன்னிலைப்படுத்தியிருந்தனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply