இந்திய மீனவர் உயிரிழப்பு விவகாரம்: டில்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகரை அழைத்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்தியா

இந்திய மீனவரொருவர் உயிரிழந்து, பிறிதொருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் டில்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகரிடம் தமது வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, மீனவர் விவகாரத்தை மனிதாபிமான அணுகுமுறையுடன் கையாளவேண்டும் எனும் இருநாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வை இறுக்கமாகப் பின்பற்றவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை இந்திய மீன்பிடி படகும், இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலும் மோதிய சம்பவத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன், மேலும் ஒருவர் காணாமல்போயுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகரிடம் தமது எதிர்ப்பைக் காட்டமாக வெளிப்படுத்திய இந்திய வெளிவிவகார அமைச்சு, இதுகுறித்து ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

கச்சதீவுக்கு வடக்கே 5 மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பலும், இந்திய மீன்பிடி படகும் மோதிய சம்பவமொன்று வியாழக்கிழமை (1) அதிகாலை பதிவாகியுள்ளது. அப்படகில் இருந்த நால்வரில் துரதிஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்திருப்பதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.

இரு மீனவர்கள் காப்பாற்றப்பட்டு காங்கேசன்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். காணாமல்போன மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கொன்சியூலர் அலுவலக அதிகாரியை காங்கேசன்துறைக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று புதுடில்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை வியாழக்கிழமை (1) காலை வெளிவிவகார அமைச்சுக்கு அழைப்பு, இச்சம்பவம் தொடர்பில் எமது வலுவான எதிர்ப்பைப் பதிவுசெய்தோம். அத்தோடு இச்சம்பவத்தின்போது துரதிஷ்டவசமாக இடம்பெற்றுள்ள உயிரிழப்பு தொடர்பில் எமது அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தினோம். கொழும்பிலுள்ள எமது உயர்ஸ்தானிகரும் இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் அவரது கரிசனையை வெளிப்படுத்துவார்.

மீனவர்களுடன் தொடர்புடைய விவகாரத்தை மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறையுடன் கையாளவேண்டும் என இந்திய அரசாங்கம் எப்போதும் வலியுறுத்திவந்திருக்கிறது. இதுகுறித்து இருநாட்டு அரசாங்கங்களுக்கு இடையில் நிலவும் புரிந்துணர்வு வலுவாகப் பின்பற்றப்படவேண்டும். படையினர் பிரயோகத்தில் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதற்குரிய உச்சபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். 

இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் அதிகபட்ச முன்னுரிமை அளிக்கின்றது. இலங்கை தலைமையுடனான சந்திப்புக்களின்போது இந்திய மீனவர் விவகாரம் குறித்து தொடர்ச்சியாக கரிசனைகள் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply