பொலிஸ்மா அதிபர் விவகாரத்தில் சட்டமா அதிபரிடம் அபிப்பிராயம் கோரினார் சபாநாயகர்

சர்ச்சைக்குரிய பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிடம் அபிப்பிராயம் கோரியுள்ளார்.

அண்மையில் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடைவிதித்து உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

இருப்பினும் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தானும் ஒரு வேட்பாளராகக் களமிறங்குவதால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதிலிருந்து விலகியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

அதேபோன்று அரசியலமைப்புப்பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை உயர்நீதிமன்றத்தினால் கேள்விக்குட்படுத்தமுடியாது எனவும், ஆகவே இவ்விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எவ்வித சட்டவலுவும் இல்லை எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். 

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து சபாநாயகரும், பிரதம நீதியரசரும் கலந்துரையாடி தீர்வுகாணவேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியிருந்த நிலையில், அதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் பிரதம நீதியரசருடன் கலந்துரையாட முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

 இருப்பினும் சிக்கல் அடைந்திருக்கும் பொலிஸ்மா அதிபர் விவகாரத்துக்கு முறையாகத் தீர்வு காண்பதற்கான சட்ட நுணுக்கங்கள் தொடர்பில் சபாநாயகர் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிடம் அபிப்பிராயம் கோரியுள்ளார். 

அதன்படி இவ்விடயத்தை உரியவாறு கையாள்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நகர்வுகள் தொடர்பில் அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply