மஹிந்தவின் ஆலோசனைக்கமையவே ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினோம் : பிரசன்ன ரணதுங்க

2022 மே 09 வன்முறை சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள், வன்முறை சரி என்று தற்போது குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. கட்சியின் உறுப்பினரை வேட்பாளராக அறிவிப்பதாக இருந்தால் சுயாதீனமாக தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் குறிப்பிட்டார்.

அதற்கமைவாகவே ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினோம் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா – உடுகம்பொல பகுதியில் திங்கட்கிழமை (5) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022 மே 09 வன்முறை சம்பவம் பற்றி தற்போது பேசப்படுகிறது. அலரிமாளிகையில் அரசியல் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று 2022.05.08 ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினேன். முறையற்ற வகையில் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவதில்லை என்று நான் குறிப்பிட்டேன்.

எமது ஆலோசனைகளுக்கு எதிராக கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் எமது ஆதரவாளர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை செய்யப்பட்டார். வன்முறைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தற்போது வன்முறை சரி,அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை சரி என்று குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

வீடுகள் தீக்கிரையானதை வரவேற்கும் தரப்பினருடன் இணைந்து எவ்வாறு அரசியல் செய்ய முடியும். கட்சியின் நலன் என்று குறிப்பிட்டுக் கொண்டு தங்களின் தனிப்பட்ட இலக்கை அடைந்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இவர்களின் செயற்பாடுகளினால் கட்சி மேலும் பலவீனமடையும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருந்தார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் குறிப்பிட்டார். அதற்கு அமையவே ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply